வெள்ளி, 30 அக்டோபர், 2020

மரண பயம் என்பது சிருஷ்டியின் நியதி....

“தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன்” என்பார் தாயுமானவர்.

எல்லா உயிர்களுக்கும் தத்தம் இனத்தை பாதுகாத்துக் கொள்ள இயற்கை கொடுத்திருக்கும் ஒரு அடிப்படை உணர்வு அது.

மனிதப்பிறவிக்கு மட்டுமே அதை கடந்து செல்லும் சக்தி கொடுக்கப்பட்டிருப்பதால் மரணத்தை வெல்வது என்பது அவன் கடமையாகிறது. மரணத்தை வெல்வது என்பது பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுபடுவதையே குறிக்கும்.

உடலுக்கு மரணம் உண்டு. ஆனால் நாம் உடலையும் கடந்த பேருணர்வை பற்றியிருக்க வேண்டியவர்கள் அன்றோ. அதைக் குறித்து சிந்திப்பதை விட்டு எண்பது கோடி ஆசைகளை வளர்த்துக்கொண்டு ஔவை சொல்வதை போல சாகும் வரை சஞ்சலத்திலே உழல்வதின் பயனென்ன !
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன-கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம் போலச்
சாந்துணையும் சஞ்சலமேதான் (நல்வழி -28)
மனிதனுடைய தேவையோ நிதம் ஒரு ஆழாக்கு அன்னம், சுற்றிக்கொள்ள ஒரு துண்டு. அதை விட்டு மற்றவையெல்லாம் தேவையற்ற சுமையே  என மேலும் சொல்கிறார் ஔவையார்.