வியாழன், 23 ஜூன், 2016

முன்வினைப் பயனை தீர்த்திடும் உபாயம்!


ஒருவருடைய எண்ணம், செயல், சிந்தனைகளையொட்டியே அவர்களின் வினைகளும் அதற்கான எதிர் வினைகளும் அமைகின்றன. சந்தர்ப்பம் அப்படி!, சூழ்நிலை அப்படி!, நான் என்ன செய்வேன்; என்று நமது வினைகளின் பலன் அல்லது பழியை அவற்றின் மீது சுமத்தி, நமது செயல்களை நியாயப் படுத்திக் கொள்கிறோம். உண்மையில் சுற்றம், சூழல் என்பவை எப்போதும் சாட்சிகளாகவே இருக்கின்றன.

முந்தைய பிறவியில் செய்த வினைகளின் பலனாகத்தான் இந்த பிறவி எடுத்திருக்கிறோம் என்பது காலம் காலமாய் நமது மரபியலில் நம்மப் பட்டு வருகிறது. நல்லவைகளை செய்வதவனுக்கு நல் வினைகளும், தீமைகளை செய்தவனுக்கு தீய வினைகளும் இந்த பிறப்பின் பரிசாய் கிடைக்கின்றன. இதுவே நமது பிறப்பு, வாழ்க்கை, வசதி, வாய்ப்பு, தொழில், விசிப்பிடம், திருமணம், உணவுப் பழக்கம் ஆகியவற்றை தீர்மானிக்கிறது என்கின்றனர்.
இதன் பொருட்டே ஒருவர் முன்னெடுக்கும் செயல்களில் தடங்கல், முட்டுக் கட்டை, தோல்விகள், வெற்றிகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் நிகழ்கிறது என்கின்றனர். ஆக, எவரும் தன் வினைப் பயனை அனுபவிக்காமல் தப்பிக்க இயலாது என்பது புலனாகிறது.

இத்தகைய வினைப் பயனை ஞானிகளும், முனிவர்களும் தங்களை அணுகாது எவ்வாறு நீக்குகின்றனர் என்பதை திருமூலர் தனது திருமந்திரத்தில் பின் வருமாறு கூறுகிறார்.
"தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை யவிழ்பவர்கள்

பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்

சென்னியின் வைத்த சிவனரு ளாலே"

- திருமூலர்-
தன்னை உணர்ந்து, தன்னிலை அறிந்த ஞானியர், தமது முன்வினை தொடர்பை சிவ சிந்தனையால் இல்லாதொழித்து விடுகிறார்கள். பின்னர் வர இருக்கும் வினைகளை அவர்கள் அவை தோற்றம் பெறுமுன்பே இவ்வாறு சிதைத்துவிடுவர். ஞானியர் இவை அனைத்தையும் தங்கள் சித்ததில் இருக்கும் சிவனருளால் செய்து முடிப்பார்கள்.