செவ்வாய், 27 நவம்பர், 2012

திருவண்ணாமலை - தலப் பெருமை

திருவண்ணாமலை - அண்ணாமலையண்ணல்
உலகமெல்லாம் போற்றப்படுவது சைவ சமயம். சைவத்திருத்தல நகரம் திருவண்ணாமலை. எந்நாட்டவருக்கும் இறைவன் தென்னாடுடைய சிவன். அந்த சிவப்பெயர்களில் சிறந்து ஓங்குவது அண்ணாமலையண்ணல்.

நால்வரால் பாடல்பெற்ற திருத்தலம்
திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் "திருவெம்பாவை" (20) பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம்.
திருமுறைத்தலம்
திருமுறைப் பாடல் பெற்ற 275 திருத்தலங்கள் (சிவன் கோயில்கள்) திருமுறைத்தலங்கள் எனப் போற்றப்படுகின்றன. இவற்றில் 22 திருத்தலங்கள் நடுநாட்டில் (தமிழ்நாட்டின் ஒரு பகுதி) அமைந்துள்ளன. இந்த 22 தலங்களில் மிகவும் சிறப்புடையது திருவண்ணாமலை ஆகும்.
முக்தி தரும் தலம்
முக்தி தரும் தலங்கள் நான்கென சிவ புராணம் குறிப்பிடுகிறது. அவற்றுள் திருவண்ணாமலையும் ஒன்று. நினைத்தாலே முக்தி தரும் தலம் இது.
பஞ்ச பூதத் தலம்
இந்தப் பிரபஞ்சம் இயங்க ஐந்து பெரும் சக்திகள் தேவை. "நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்" என்ற இந்த பிரிவுகளை பஞ்சபூதம் என்று சொல்கிறார்கள். "பிரிதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம்" என்ற இந்த ஐந்து பஞ்ச பூதங்களுக்கும் தலம் அமைத்து நம்முன்னோர் வழிபட்டு ஆனந்த பரவசம் எய்தினர். இவற்றில் 'தீ' என்கிற அக்னித்தலமாக திருவண்ணாமலையை, நம் முன்னோர் வழிபட்டனர். அக்னியே அனைத்திற்கும் மூலம். ஈஸ்வரன், அருணாசலேஸ்வரனாக, மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது.
ஆதாரத்தலம்
ஆறு ஆதாரத்தலங்களில் மணிப்பூரக தலமாக விளங்குவது திருவண்ணாமலையாகும். சூரியன், சந்திரன், அஷ்டவசுக்கள் முதலான தெய்வங்களே வழிபட்டதான சிறப்புடையது.

ஞானிகளும் துறவிகளும்
இத்தலம் சித்தர்களின் சரணாலயமாகவும் விளங்குகிறது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டுச்சித்தர் இத்தலத்திற்கு உரியவராக விளங்குகிறார்.
மகான் சேஷாத்திரி சுவாமிகள்
அருணகிரிநாதர், விருபாஷதேவர், குகைநமச்சிவாயர், குருநமசிவாயர், தெய்வசிகாமணி, அருணாசல தேசிகர், மகான் சேஷாத்திரி சுவாமிகள், பகவான் ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார் முதலான
ஞானத்தபோதனர்களை தனது ஜோதியில் இணைத்துக்கொண்ட மகத்துவம் உடையது திருவண்ணாமலை.
All rights 2012 (c) Reserved. Site designed & maintained by Arunachaleswarar Temple, Tiruvannamalai