வியாழன், 23 மே, 2013

சித்தர்கள் பற்றிய ஒரு பார்வை


உண்மையான இறைத்தளத்தில் இயங்கும் மெய்யுணர்வாளர்கள் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. அவர்கள் தான் சித்தர்கள். இயற்கையோடு இணைந்து மானுட வர்க்கத்தை மேன்மைப் படுத்தும் பொருட்டு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அவர்கள் "மனித உடம்பு " எனும் வடிவத்துக்குள் வசிக்கின்றார்கள். தங்களின் பணி முடிந்த காலத்துக்குப் பிறகு மனித உடலைத் துறக்கின்றார்கள். இதுவே புற வழிபாடுகளைப் புறக்கணித்த, நுட்பமான மெய்யுணர்வு தளத்தில் இயங்கும் இறை இயக்கங்களின் கோட்பாடு.

மனத் தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக் கொள்ளும் வாழ்க்கை தேவையா?" எனத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டு தெளிவடையும் பக்குவம் மனிதனுக்கு அவசியம்..
அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, பிறரின் நலன்களை மட்டுமே மனதில் வைத்து சேவை செய்த மகான்களைத் தான் நாம் சித்தர்கள் என்று குறிப்பிடுகின்றோம். அகத்தியர், போகர், திருமூலர், இடைக் காடர், கருவூரார், சிவவாக்கியர், அழுகணி, பட்டினத்தார்.... என சித்தர்கள் பலரின் பிறப்பு ரகசியத்தை விளக்கி சொல்கின்றது..பின்வரும் குறிப்புகள்..
மனித மனம் மிகுந்த ஆற்றல் வாய்ந்தது. அந்த ஆற்றலைக் கொண்டு பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலைக்கு மனிதன் செல்ல வேண்டும். இயற்கையின் இயல்பான இயக்கம், நீண்ட காலப் பயணத்துக்குப் பின், மனிதனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
புற உலகின் நீள, அகல ஆழங்களைக் காண முயல்வதில் மனிதன் தன வாழ் நாள் முழுவதையும் செலவிடுகின்றான். ஆனால், தன்னையும் தன உள்ளத்தையும் அறிந்து கொள்ள மனிதன் முயற்சி செய்கின்றானா? அல்லது முற்படுகின்றானா? உலகைச் சுற்றிவர ஆசைப் படுபவன், தன உள்ளத்துக்குள் உள்ள ஓர் அற்புதமான உலகத்தில் வலம் வர விரும்புவானா?
தன்னையும் தனது உள்ளத்தையும் அறிந்து கொள்ள மனிதன் முயல வேண்டும். புற உலக ஞானமும், அறிவியல் கருவிகளும் அந்த முயற்சிக்கு துணை புரிய வேண்டும். மனித மனத்தின் முழுமையை அறிந்து உணர்வதால் மட்டுமே மனித இனத்தின் எதிர்கால ஆபத்துக்களை களைய முடியும்..இந்த கருத்தியலின் விரிவான விளக்கமாக அமைந்தவையே "சித்தர்களின் தத்துவங்கள்".
மருத்துவம், மந்திரம், ரசவாதம், யோகம், ஞானம் போன்ற பல் துறைகளில் சித்தர்கள் வார்த்திருக்கும் பாடல் வடிவிலான கருத்துக்கள், அற்புதமான பொக்கிஷங்கள். நாடி, நரம்பு, குருதியோட்டம், உறுப்பு நலன்கள் அனைத்தும் ஒன்றாக அமைந்த மானுட குலத்தைப் பிரித்தாளும் சாதி, சமய, இனம், மதம் போன்றவற்றை சாட்டையடி வார்த்தைகளால் சாடி, மானுட ஒற்றுமைக்கு வழி தேடிய அமைதிப் புரட்சியாளர்களே சித்தர்கள்..
கடவுளை காண முயல்பவர்கள் பக்தர்கள் என்றால், கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்! சிலப்பதிகாரத்தில் " நாடுகாண் காதை"யில் இடம் பெறும் " சித்தன்" என்ற சொல்லுக்கு " கன்மங்களைக் கழுவியவன்", "எட்டுவகை சித்துகளை உருவாக்கியவன்" என்று அடியார்க்கு நல்லார் பொருள் உரைக்கின்றார். மேலும், ஜீவன் முக்தர்கள் என்றும், ' பிறப்பு அறுத்தவர்கள் என்றும் அவரே அர்த்தம் கூறுகின்றார்.
சித்தத்தின் சலனமே அனைத்து தத்துவங்களின் தோற்றம். ஆதலால் சித்தத்தை வெல்ல வேண்டும்.. சித்தத்தின் சலனம், பிராண வாயுவின் சலனத்தையும், பிராணனின் சலனத்தையும், பொறுத்தது. பிராண வாயுவின் இயக்கமே சித்தத்தின் இயக்கம். இந்த உண்மையை உணர்ந்தே சித்தர்கள் பிராணாயாமத்தை வலியுறுத்தினர். பிராணாயாமத்தின் மூலம் பிராணனும், சித்தமும் ஒடுங்கிய நிலையே 'சித்தர்' நிலையாகும். வெள்ளிப் பனித் தூய்மை கொண்ட சிவா நிலையும் இதுவே. சிந்தை தெளிந்த இந்த நிலையில் 'சித்தமும் இல்லை, செயலும் இல்லை!. இத்தைகைய மோன நிலையை திருமூலர் 'செத்தார் நிலை' என்று குறிப்பிடுகின்றார்.
இது போன்று தவப் பயணம் மேற்கொண்டு இறை நிலையுடன் கலப்பவர்களே மெய்யான சித்தர்கள். தவிர, சித்தர், முனிவர், ரிஷி, மஹான், என்று புற வேடம் பூண்டு அறியா மக்களை ஏமாற்றும் போலித் துறவிகளும் இருக்கின்றனர். ஆகவே, புறத் தோற்றத்தை வைத்து மெய்யுணர்வாளர்களை எடை போடக் கூடாது..அக நிலையையும் தவ வலிமையையும் கொண்டே உண்மையான சித்தர்களை நாம் அடையாளம் காண வேண்டும்..
சித்தர்கள் எங்கிருந்து எப்படி தோற்றம் தந்தாலும், சாதாரண மக்களோடு கலந்திருந்தாலும் அவர்களது சித்தமானது 'சிவம்'எனும் ஒளியிலேயே உறைந்திருக்கும். சித்த நிலை எய்தியவர்கள், காடுகளிலும், மலைகளிலும், மட்டுமே என்று எண்ணி விட இயலாது. சித்தத்தின் நிலையைக் கொண்டே சித்தர்கள் அடையாளம் காண வேண்டும்...பிராணனும் சித்தமும் ஒன்றிய நிலை எய்திய சித்தர்களே, உண்மையும் தனித் தன்மையும் கொண்ட இறைத்தன்மையும் கொண்ட இறைத்தன்மை நிறைந்தவர்கள். இவ்வாறு நேரடியாக இறை நிலையில் கலந்த சித்தர்களுக்கு இடமோ காலமோ கிடையாது என்பதே உண்மை. இடங்களையும் காலங்களையும் கடந்து சித்தர்கள் இருக்கின்றார்கள் என்பதே உண்மை...
சித்தர்களின் வாழ்வும் கால வரலாறும் இதுவரை துல்லியமாக வரையறுக்கப் படவில்லை..முழுமையாகப் பதிவு செய்யப் படவில்லை..எல்லாம் கடந்த நிலையை எய்தும் இலக்கு நோக்கி சித்தர்களின் இறைவழி யாத்திரை இருந்ததால், தங்களைப் பற்றிய பதிவுகளை அவர்கள் பெரிது படுத்தவில்லை.. என்பதே இதற்குக் காரணம்.
சாதி சமய சடங்குகளை கடுமையாகச் சாடியதாலும், எண்ணிக்கையில் நிறைந்திருந்த பொய்யான இறை நெறியாளர்களை கண்டித்ததாலும், அவர்களின் வரலாறு எதிர்ப்பாளர்களினால் இருட்டடிப்பு செய்யபட்டது. இந்த எதிர் கால நிலையை உணர்ந்ததினாலேயே, சித்தர்கள் தங்கள் நெறிகளை எளிய பாமர மொழி நடை பாடல்களாக இயற்றினர். பெரும்பாலும் 'வாய் வழி, செவி வழி இலக்கியமாக' பதிவு செய்யப் பட்டிருப்பதே இதற்குச் சான்று.
தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் காணப்படும் 'நிறை மொழி மாந்தர்' என்ற தமிழ் சொல் அந்தக் காலத்தில் வாழ்ந்த சித்தர்களைக் குறிப்பிடுவது தான்.
சித்தர்களின் சீர் மிகு வரலாற்றை அறிவதோடு, அவர்களின் சித்து விளையாடல்களால் மக்கள் அடைந்த நன்மை என்ன என்பதை நான் படித்து அறிந்து கொண்ட ஒரு நூலை, நீங்களும் அறிந்து தெரிந்து, தெளிவு பெற விரும்பி வாசகர்களுக்கு தருகின்றேன்...