வியாழன், 16 மே, 2013

வாழ்க்கை ஓர் கடமை --


பலரும் கடமை என்றால் காலையில் எழுந்து பல் துலக்கி, காபி அருந்தி, பேப்பர் படித்து விட்டு, நெற்றியில் திருநீற்றைப் பூசிக் கொண்டு,அலுவலகம் சென்று வந்து, மாலையில் தொலைக் காட்சியைப் பார்த்து விட்டு, இரவில் உறங்கி எழுந்தால் அன்றைய கடமை நிறைவேற்றி விட்டதாக நினைக்கிறார்கள்.இதுவே கலியுக மனிதனின் அவல நிலை. யாராவது கேட்டால், ’செய்யும் தொழிலே தெய்வம். என்னுடைய அலுவலகக் கடமைகளை ஒழுங்காகச் செய்கிறேன். அது போதும்’ என்று சொல்லி விடுகிறார்கள். உண்மையில் மனிதனுடைய கடமை என்ன என்பதை நமது முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ளனர். மனிதனுக்கு ஐந்து விதமான நித்திய கடமைகள் உண்டு.
தன்னைப் பெற்றெடுத்த தாய் தந்தையர்களைப் பேணுதல் மனிதனின் முதல் கடமை. அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, மருத்துவ வசதி போன்ற வசதிகளை தனது சக்திக்கு முடிந்த வகையில் நிறைவேற்ற வேண்டும். முதியோர் இல்லங்களில் பெற்றோர்களை தங்க வைக்கும் கொடிய வினைகள் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்புடையது அல்ல. அடுத்து மனிதன் தான் உயிர் வாழ உணவு, நீர், காற்று, நெருப்பு என பஞ்ச பூத சக்திகளைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்கிறான். இந்த சக்திகளை புதுப்பிப்பதற்கு அவன் எந்த வித முயற்சிகளையும் எடுப்பதில்லை. உரிய சந்தியா காலத்தில் வழிபாடுகளைச் செய்து, காயத்ரீ ஜபித்து, அக்னி ஹோத்ரம் போன்ற பஞ்ச பூதங்களை நிலைப்படுத்தும் வழிபாடுகளை ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் நிறைவேற்றியே ஆக வேண்டும்.இதில் யாருக்குமே விலக்கு கிடையாது.
மூன்றாவதாக ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ரிஷியின் வழி வந்தவர்களே. நாம் ஆன்மீகத்தில் மேலும் மேலும் முன்னேறி இறுதியில் முக்தி என்னும் தெய்வீக நிலையை அடைய அல்லும் பகலும் இறைவனிடம் பிரார்த்திக்கும் ரிஷிகளுக்கு தினமும் அர்க்ய வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும். மூர்த்தி, தீர்த்தம், தலம் முறையாகத் தரிசனம் செய்து நற்கதி அடைய முயற்சி செய்வதே நமது கோத்ராதிபதிகளுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும். நாம் இன்று பெற்றிருக்கும் கல்வி, நிலம், வாகன வசதி, வீடு, செல்வம், நல்ல மனைவி, குழந்தைகள் என அனைத்துமே நமது மூதாதையர்களின் ஆசியால் வந்தவையே. இத்தனை வசதிகளைக் கொடுத்த நம் மூதாதையர்களுக்கு அமாவாசை, மாளய பட்ச தர்ப்பணம் போன்ற பித்ரு பூஜை வழிபாடுகளை முறையாக இயற்றி இயன்ற அளவு அன்னதானம் செய்து வருதல் வேண்டும்.
மனிதனாய்ப் பிறந்த நாம் அல்லல் படும் மற்ற மனிதர்களின் துயர் தீர்க்கவும் அவர்கள் நலம் பேண அல்லும் பகலும் உழைப்பதும் மனிதக் கடமைகளில் ஒன்றாகும். அன்னதானம், ஆடை தானம், கல்வி தானம், பயனுள்ள அறிவுரை தானம் போன்ற ஏதாவது ஒரு தானத்தை முடிந்த அளவில் தினமும் நிறைவேற்றுவதும் மனிதனுக்கு அத்தியாவசியமான கடமையாகும். மனிதன் மற்ற உயிர்களைப் பேண மறந்தாலும், மற்ற உயிர்கள் எல்லாம் மனிதன் நலமாய் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றன என்பதை அறிந்தால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். உலகில் உள்ள விஷ சக்திகளை ஈர்த்து பஸ்மம் செய்யும் பாம்புகள் இல்லா விட்டால், மனித குலம் என்றோ அழிந்து போயிருக்கும். பூமியில் உருவாகும் விஷ வண்டுகளைக் கோழி, புறா, மைனா போன்ற பறவை இனங்கள் உணவாக ஏற்காமல் போனால் வண்டுகளே விஷ வண்டுகளே மனித இனத்தை அழித்து விடும். நமக்காக பாடு படும் மற்ற உயிர்களுக்கு நாம், உணவு, நீர், உறைவிடம், மருத்துவ வசதி தந்து அவற்றைக் காப்பது மனித இனத்தின் தலையாய கடமை அல்லவா?