சனி, 20 ஏப்ரல், 2013

ஞானம்தான் மனிதன் அடைய வேண்டிய உன்னத லட்சியம்

ஞானம் அடைய முயற்சிகள் செய்யும்பொழுது, நமக்கு ஏற்படும் சில அனுபவங்கள் நம்மை அந்த முயற்சியிலிருந்து விலக வைக்கும் வல்லமை உள்ளது. அது பற்றி நான் பலருடன் விவாதித்ததுண்டு. இருந்தாலும் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. நான் புரிந்த வரை, அவை பற்றிய எனது சிந்தனைகள்.
முதலில் வருவது - அளவுக்கதிகமான ஞான ஆர்வத்தினால் தம் கடமைகளை மறத்தல் / மறுத்தல்.சிலருக்கு ஞான ஆர்வம் வந்ததும் தத்தம் குடும்பக் கடமைகளை மறந்து, அதை மறுத்து ஞானத்தின் பின்னால் ஓட ஆரம்பித்து விடுவார்கள். பொதுவாக, குடும்பக் கடமைகளையே செய்ய முடியாவிட்டால் நிச்சயம் ஞானக் கடமைகளை செய்ய முடியாது.
இதற்கு முக்கிய காரணம், ”நாம்” முயற்சி செய்து நாமே ஞானம் அடைகிறோம் என்கின்ற ஆணவம் தான். இதை முதலில் விடவேண்டும். ஞானம் நம்மைத் தேடி நிச்சயம் வரும். முயற்சி மட்டுமே நம்முடையது. இந்தத் தெளிவை நம் குரு மட்டுமே தர முடியும். நம் மீது உண்மையான அக்கறை கொண்ட ஞான குரு நிச்சயம் நம்மை சரியான வழியில் வழி நடத்துவார்.
அடுத்து இந்த வரிசையில் வருவது - அமானுஷ்ய சக்திகள். இந்த சக்திகள்தான் ஞான மடைவதற்கு முக்கிய எதிரிகள். நம் மனித முயற்சி தேவைப்படாத எதுவும் நமக்கானதில்லை. அது நமக்காக செய்யப்பட்டாலும் பிறருக்காக செய்யப்பட்டாலும்.
ஞான மார்க்கத்தில் செல்லும் எல்லோரும் ஏதாவது ஒரு கட்டத்தில் இதைக் கடந்து செல்ல வேண்டி உள்ளது. சிலர் இந்த அமானுஷ்ய சக்திதான் ஞானம் என்று அதிலேயே இருந்துவிடுவார்கள்.
அடுத்து வருவது - பதவி, புகழ். பதவி, புகழ் என்பது ஒரு போதை. அதற்கு அடிமையாக ஆகாமல் இருக்கவேண்டும். தவிர்க்க முடியாமல் வரும் பதவி, புகழ் இவற்றால் ஏற்படும் போதை தலையில் ஏறாமல் ஞான மார்க்கத்தை விட்டு விலகாமல் சென்றால் வெற்றி நிச்சயம்.
புகழின் சில விளைவுகள் - நம் ஆணவம், அகங்காரம் அதிகரித்தல். சொல் பேச்சு கேளாமை. தான் தோன்றித்தனம். தன்னை முன்னே நிறுத்தி காரியங்கள் செய்ய முயல்தல். இவை அனைத்தும் ஞானப் பாதைக்கு எதிரானவை.
அடுத்து வருவது - அளவுக்கதிகமான பணம், செல்வம். நம் தேவைக்கு, தகுதிக்கு அதிகமான செல்வம் வருவது போல இருந்தால் நிச்சயம் பிரச்சினைதான்.
பதவி, புகழின் அனைத்து விளைவுகளும் பணத்துக்கும் உண்டு.
அடுத்தது - தான் ஞானம் அடைந்துவிட்டதாக தானே எண்ணுதல். சிலருக்கு ஞானப் பாதையில் செல்லும்போது திடீரென்று தான் ஞானம் அடைந்துவிட்டதாகத் தோன்றும். அதற்கு போலியாக சில அறிகுறிகளும் அவர்களுக்கு இருக்கும். சுற்றி இருக்கும் சிலரும் அதை வழி மொழிவார்கள். அதையே பிடித்துக் கொண்டு ஞானப்பாதையை விட்டு விலகிவிடுதல்.

நமக்கு ஞானம் வந்தால் நிச்சயம் அது நமக்கு தெரியாது. இதை சரியாக கணிக்க வேண்டியவர் நம் குரு மட்டுமே.

எவ்வளவு இருந்தாலும், ஞானம்தான் மனிதன் அடைய வேண்டிய உன்னத லட்சியம். அதை நோக்கி பயணிப்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை. ஞானப் பயணமே நம் லட்சியப் பயணம்.