புதன், 11 டிசம்பர், 2013

திருவண்ணாமலை மகிமை


ஆன்மீக பூமியாம், அண்ணாமலையில் அவ்வப்போது அருளாளர்கள் இருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்கள்.
ஞானத் தபோதனர்களை வா என்று அழைக்கும் மலை என இதனை புராணங்கள் செப்புகின்றன.
தங்கக் கை ஸ்ரீசேஷாத்திரி பகவான் அருள்புரிந்த ஸ்தலம் திருவண்ணாமலை.
பகவான் ஸ்ரீரமண மகரிஷி அருணாச்சல சிவம் என்கிற மந்திரத்தை அருளி பக்தர்களுக்கு உபதேசம் நிகழ்த்திய மலை திருவண்ணாமலை.
தற்போது அமரரான பகவான் யோகிராம் சுரத்குமார் சுவாமிகள் இருந்ததும் திருவண்ணாமலையில் தான்.
சாதுக்களும், மகான்களும் பெருகி உள்ள திருத்தலமும் திருவண்ணாமலை ஆகும் ஆண்டிகள் பெருத்த ஊரும் அண்ணா மலையே.

மலையிலிருந்து சிவன் சிலை செய்கிறார்கள். ஆனால் திருவண்ணாமலையின் சிறப்பு மலையே சிவனாக இருந்து அருள்பாலிப்பதாகும். மலையின் சுற்றளவு 18 கிலோ மீட்டராகும். சுற்றி வர சுமார் 4 மணிநேரமாகும்.

தெற்கே மதுரைக்கு அருகே திருச்சுழியில் வேங்கட ராமனாக அவதரித்து, மதுரை சொக்கப்ப நாயக்கர் தெருவில் வசித்து வந்த இளைஞர், 16-வது வயதில் ஈர்க்கப்பட்டு, தவஞானியாக உரு மாற்றிய மலையும் திருவண்ணாமலைதான். கோவணத்துடன் இருந்து அவர் அருள் புரிந்தார். சூட்சுமங்கள் நிறைந்தது மானிட வாழ்வு என்ன நடக்கும்? என்பதை யாரும் அறிய முடியாது என்பதையும் வலியுறுத்திய அவர்தான் ரமணர்.
பௌர்ணமி நாளில் முழு நிலவின் ஒளியிலிருந்து, பதினாறு கலைகள் பிரகாசிப்பதாலும், அண்ணாமலையில் ஒளிக்கதிர்கள் சிதறி, மலை வலம் வரும் பக்தர்களின் உடலிலும், உள்ளத்திலும் ஊடுருவிப் பாய்வதாலும், மலை வலம்வரும் போது பக்தர்கள் எண்ணுவதை அப்படியே நிறைவேற்றிட அருளும், பொருளும், நோயற்ற வாழ்வும், வெற்றியும், மகிழ்வும், திருமணங்கள் நடைபெறவும், புத்திரப்பேறு ஏற்படவும், தரித்திரத்தையும், துக்கத்தையும், வறுமையையும் நீக்கி, செல்வத்தை தந்திடவும் ஓம் நமச்சிவாய என்று சொல்லிக் கொண்டே பௌர்ணமி நாளில் மலை (கிரி) வலம் வருவோம். அண்ணாமலையாரின் அருள் பெறுவோம்