புதன், 8 ஜனவரி, 2014

முயற்சியும், குரு பக்தியும்.....

.
இந்த வாழ்க்கையிலே இறை நிலை உணர்வு என்பது பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலே மட்டும் உணர்வதாகவே இருக்கிறது...
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
 என்று சொல்லிற்கேற்ப, எவர் ஒருவர் எந்த ஒரு பொருளிலே இருந்து விலகி நிற்கிறானோ, அந்த பொருளிலில் இருந்து அவருக்குத் துன்பம் உண்டாவதில்லை...
இந்த உலகத்திற்காகக் கவலைப்படுபவன், அவன் எண்ணமே தான் உலகமாக, கவலையாக இருப்பதை விழிப்பில் இல்லாததால் கவனிக்கத் தவறுகிறான்.
ஒருவிதத்திலே, இது காப்பற்ற நிலையை உணர்தலே.. Insecure...
மேலும் இது போன்ற பலவித காப்பற்ற நிலைகள் மனதிற்குள் கொண்டிருக்கவே செய்கிறோம்.. ஆனால் இதனை சற்று விலகி பார்க்கும் போது, தான் தனது என்ற பற்றுக்களின் அடையாளமே இப்பயத்திற்குக் காரணம்.
ஒரு விதத்திலே மனிதன் துணிந்து கெடுதல் செய்வது நடக்காமல் இல்லை.. குருவின் காலத்திலும்.
மகான்கள் எங்கும் அமைதி நிலையை விட்டுத் தரவில்லை... ஏனெனில், தன்னை அன்றி ஒரு பொருளும் இல்லை என்ற மௌன நிலையிலே இருந்து விலகவே இல்லாததால்... மகான்கள் வாழும் காலத்திலும் இது போன்ற இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் பல செயல்கள் இருக்கவே செய்தன...
ஆழ்ந்து செல்லும் தூக்கத்திலே இந்தக்கவலை இல்லை... கவலை கொண்டவன் தூங்கிய போதும் கூட, கவலைப்பட்ட விசயம் இருக்கவே தானே இருந்தது... இருந்தாலும் ஆழ்ந்த தூக்கம் என்ற நிலையில் அந்த எண்ணங்கள் இல்லை....
எண்ணம் என்ற ஒன்றே தான் அனைத்தும் நமக்குள் சொல்கிறது. எண்ணம் என்ற ஒன்று இறை நிலையிலே கலந்த பின், அந்த எண்ணத்தினாலே உலகம், உடல், தான் தனது என்ற பலவகை பற்றுணர்வுகளை நாம் அனுமதிக்கிறோம்...
இயற்கை என்பது இந்த உலகம் மட்டுமே இல்லை.. இந்த பிரபஞ்ச இயக்கமே இயற்கையின் பகுதி தான். மனிதன் முன்னுக்குப்பின் முரணாக வாழ்ந்ததன் அடையாளமே இந்த பூமியின் மீதான பயத்தை உருவாக்கி வைத்துள்ளது...
தான் தனது என்ற இயக்கம் தூக்கத்திலே இருப்பதில்லை... அதனால் உலகமும் இல்லை, இந்த பயமும் இல்லை.. விழித்த உடன் மீண்டும் உலகம் என்கிற புலன்மருந்தை உட்கொண்டு விட்டே தான் எழுகிறான்.
அயரா விழிப்பிலே மௌனத்திலே நாம் நிலைக்கும் போது, எண்ணங்களைக் கொண்ட மனமானது தன்மாற்றம் பெற்று உயிராகிறது... அங்கே எண்ண அலைகள் இல்லை எனினும், உயிர் என்ற கட்டுக்குள் உள்ள நிலைகளை அறிவிலே தெளிவதும், அங்கே அனுபவமும், அறிவும் பிரிந்தே இருக்கிறது.. எப்போது உயிரானது மென்மேலும் இறை நிலையிலே ஒடுங்கி அறிவாக மாறுகிறதோ அப்போதே, இரண்டற்ற நிலையை அடைகிறது... இந்த நிலையிலே தான் தனது என்ற பற்றுக்கள் அறவே இல்லை... விரிந்த பேரறிவு தனித்து தனது சுயமாய் சொலிக்கிறது. அங்கே இருப்பது = இருப்பு + அது என்று விரிந்து கொண்டே போகிறது... அந்த விரிந்த நோக்கே ஆன்ம நிலையாம் பேரின்ப நிலை...

கண்ணைத் திறந்தால், புலன் என்ற கட்டம் வரைக்குமே அனைத்தும்...

வெறும் கண்ணை மூடி இருத்தல் சுய நலமே என்பவர் இருப்பார்கள்... அவர்களுக்கு ரமணர் சொன்ன வரிகள்...
ரமணர் : உலகோ, அதன் துன்பங்களோ தூக்கத்தின் போது உங்களுக்குத் தோன்றியதுண்டா? அவ்வாறே நீங்கள் உமது உண்மை நிலையில் நின்றால் உலகத்தோற்றமோ துன்பக்காட்சியோ சற்றும் இராது. உண்முஅகப்பட்டு ஏகான்ம ஸ்வரூபனாக நீவிர் நின்றால், உலகத்தோற்றம் சத்து இல்லாத வெறும் நிழலே என்று உணர்வீர். அந்த நிழலுலகில் காணப்பெறும் துன்பமும் மனத்தளவே...
கேள்வி : கண்ணை மூடிக்கொண்டு தான் மட்டும் தப்பிக்கும் சுய நலம் அல்லவா இது?
ரமணர் : உலகம் என்று தனியாக உமக்கு அயலாய் வெளியே எதுவும் இல்லை. " தேகமே நான்" என நீங்கள் நினைப்பதால் உமக்கு அயலாய் உலகமும் துன்பமும் இருப்பதாகத் தோன்றுகிறது. உமது நிஜ ஸ்வரூபத்தை நீர் உணர்ந்து நின்றால் இன் நிழல்களால் நீர் பாதிக்கப்பட மாட்டீர்...
கேள்வி : எத்தனையோ பெரியோர்களும் சமூக நல ஊழியர்களும் எவ்வளவோ முயன்றும் உலகின் துன்பங்களை அவர்களால் அகற்ற முடியவில்லை....
ரமணர் : உலகிற்கு ஏதோ சாதிக்க வேண்டும் என்று நினைத்து முயல்பவர்கள் அகந்தை அகலாதவர்களாக இருப்பதால் முடிவேதும் காண இயலாது வருந்துகிறார்கள். அவர்கள் தமது நிஜ ஸ்வறுபத்தை உணர்வரேல், அதுவே அவர்கள் தமக்கும் உலகிற்கும் செய்யக்கூடிய பேருபகாரமாகும்.
கேள்வி : அப்பேர்ப்பட்ட மகான்கள் உலகிற்கு உதவக்கூடாதா என்ன?
ரமணர் : அவர்கள் உலகிற்கு ஒன்றுமே செய்யவில்லை என்று உமக்கு நிச்சயமாய் தெரியுமா? மேடைப்பிரசங்களாலும், உலகாயத உதவிகளாலும் வெளிமுக முயற்சிகளாலும் சாதிக்க முடியாத பேருதவியை மகான்கள் தமது கம்பீரமான மௌன நிலையில் இடையறாது செய்து கொண்டே தான் இருக்கிறார்கள்.
கேள்வி : உலகில் துன்பங்களை நீக்க எங்களைப்போன்றோர் செய்யக்கூடிய உதவி யாது?
ரமணர் : முதலில் நீர் துன்பமற்று இருந்தால் வேறெங்கும் துன்பத்தை காணமாட்டீர். வெளியில் இருப்பதாக நீங்கள் கருதும் உலகமும் அதன் துன்பமும் உமது மனத்தோற்றங்களே... அத்தோற்றங்களிலே மனதை செலுத்தாது உமது நிஜ ஸ்வரூபமாய் நீர் நின்றால், உண்மையில் உள்ளது அமைதி மயமாம் அதுவொன்றே என்று உணர்வீர்...
தான் எழுந்தால் எல்லாம் வரும்.. தானடங்கினால் சகலமும் அடங்கும் என்ற ரமணரின் வரிகள்...

தான் தனது என்ற பற்றே தான் மூலகாரணம்... இதற்கு நமது குரு என்ன சொன்னார் எனில்,
தான் தனது எனும் எண்ண எழுச்சி ஊக்கும்
தன்முனைப்பை மாற்ற தவம் பல நாள் செய்தேன்
நானவனாய் அறிவினது முடிவினில் கண்டேன்
நலமெண்ணி நலம் செய்து வாழக்கற்றேன்

ஊன் உடலே நான் என்று குறுகி நிற்போர்
உரைக்கும் வசைமாரி எல்லாம் உயர்வாழ்த்தாச்சு
ஏன் வருந்த இரக்கமுடன் பழிப்போர் தம்மை
எப்போதும் வாழ்த்தி வாழ்த்தி இன்பம் காண்போம்...
தான் தனது எனும் எண்ண எழுச்சி ஊக்கும் தன்முனைப்பை மாற்ற தவம் பல நாள் செய்தேன் என்ற வரிகள் கவனித்து நாம் கடைபிடிக்க வேண்டியது...
அவரவரின் முயற்சியும், குரு பக்தியும் எளிமையாக்கி மௌன நிலையை எளிதில் கிட்ட உதவும்..