வெள்ளி, 1 ஜனவரி, 2016

குருவைத் தேடி....

 "குரு பரம்பரை" என்கிற இந்த ஒற்றை தத்துவத்தின் மீது கட்டமைந்ததுதான் சித்தரியல்.  இங்கே குரு ஆதியும், அந்தமும் ஆனவர். அவருக்கு மிஞ்சியது என எதுவும் இல்லை. எல்லாம் அவரால் ஆனதே, அவரன்றி ஓரணுவும் அசையாது என்பதைப் போன்ற ஆழ்ந்த சத்தியமான கருத்தாக்கங்களின் வழி நிற்பதுதான் நம் சித்தர்களின் பாரம்பரியம். இந்த அடிப்படைகளுக்கு எவரும் விதிவிலக்கில்லை. ஆதி குருவான சிவனில் துவங்கி அவருடைய அணுக்க சீடர்களின் வழி வந்தவர்களே நம் சித்தர் பெருமக்கள். 

இப்போதெல்லாம் தெருவுக்கு நாலு குருமார்கள் விளம்பர பதாகைகளோடு வலிய வந்து ஞானம் தரவும், தீட்சை கொடுக்கவும்  தயாராக இருக்கின்றனர். என்ன அவர்கள் வசூலிக்கும் தட்சிணைதான் கொஞ்சம் அதிகமாய் இருக்கிறது. இத்தகைய குருமார்களின் வேடம் கலைகிற போது மட்டுமே நாம் மெய்யான குருவைப் பற்றி யோசிக்கவும், தேடவும் விழைகிறோம்.  மெய்யான குரு என்பவர் யார்?, அவர் எங்கிருப்பார்? அவரை எப்படித் தேடி கண்டறிவது? என்கிற கேள்வியும் குழப்பமும் நம்மில் அநேகருக்கு உண்டு.

மெய்யான குருவை கண்டறிவது என்பது ஒரு வகையான வாழ்நாள் பயணம். நம்மில் பலரும் இப்படி மெய்யான குருவை தேடிக் கொண்டிருப்பவர்கள்தாம். குருவை தேடிக் கண்டு பிடிக்கும் இந்த பயணத்தை எப்படித் துவங்குவது அல்லது எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதில்தான் பலருக்கும் குழப்பம் வருகிறது. இதற்கு நம் முன்னோர்கள் எளிய தீர்வினை அருளியிருக்கின்றனர். 

ஆம் மிக எளியவழி. அது இதுதான்  "மாதா, பிதா, குரு தெவ்யம்" . ஆம் நம் பெற்றோரே நமது முதல் குரு,  இதை உணர்ந்து நம் தாய் தந்தையரை போற்றிப் பணிந்து  அவர்களின் வழி நடத்துதலை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்கும் போது அடுத்த கட்டமாய் மெய்யான குரு நம்மைத் தேடி நம் முன்னே வருவார்.  இத்தகைய வழி நடத்துதலில்தான் நாம் எதைத் தேடுகிறோமோ அதையே அடைகிறோம்.

இந்த எளிய அடிப்படையை புரிந்துணர்ந்து பயணிக்க ஒருவருக்கு மெய்யான குருவின் தரிசனம் கிடைக்கும்.   குரு என்றால் இருளை நீக்குபவர் என்று பொருள்.  மெய்யான குரு நம் அக இருளை நீக்கக் கூடியவர். இத்தகைய குருவின் உதவியால் நம்மை நாமே உணரத் துவங்கும் போது, நான் என்கிற அகந்தை அழியும் போது நம்மில் மிளிர்ந்திருக்கும் ஒப்பற்ற பரம்பொருளை நாம் உணரக்கூடியவர்களாய் ஆகி விடுகிறோம். இதனையே சித்த நிலை என்கிறோம். தெய்வ நிலை என்பதும் இதுதான்.

மாணிக்க வாசகர் மற்றும் சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் இறைவனே குருவாக நேரில் வந்து உபதேசம் செய்ததாக புராணங்கள் சொல்கின்றன. இறைவனோ உருவமற்ற சூக்குமமானவர். அப்படி சூக்குமமான நிலையிலிருந்தே ஏன் குரு உபதேசம் செய்யாமல் மனிதவடிவில் நேரில் வந்து உபதேசம் செய்தார் என்ற கேள்வி எழுவது இயற்கையே.."ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா" என்கின்றன வேதங்கள். கடவுளாக இருந்தாலும் மனித உருவில் வந்து ஆகவேண்டும் என்பதே இதன் பொருள். ஆக சூக்கும வடிவில் இருக்கும் ஒருவர் அது கடவுளாக இருந்தாலும் குருவாக இருந்து போதிக்க முடியாது என்பது இவற்றில் இருந்து தெளிவாகிறது. 

சித்தரியலிலும் சூக்கும நிலையில் இருந்து எந்த குருவானவரும் போதித்ததாக எந்தவித குறிப்புகளும் கிடைக்கவில்லை. மாறாக ஜீவ சமாதி அடைந்த ஒரு சித்தர் அதிலிருந்து மீண்டுவந்து உபதேசம் செய்து பின்னர் வேறொரு இடத்தில் மீண்டும் ஜீவ சமாதியடைந்ததாக குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. 

அந்தவகையில்அகத்தியர் தனது "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் குருவானவரை அணுகி பயனடையும் வழிவகையை விளக்குகிறார்.

பார்க்கவென்று பலநூலுந் தேடிப்பார்க்க
பக்குவங்க ளில்லையடா வயதோகொஞ்சம்
மார்க்கமுடன் கொஞ்சவய தானாலென்ன
மகத்தான சற்குருவைத் தேடிப்பார்த்து
ஏர்க்கையுட னவர்மனதுக் கேற்க வல்ல
இன்பமுடன் தயவுவர நடந்தாயானால்
தீர்க்கமுடன் சத்திசிவ தீச்சைவைத்து
செம்மையுட னுதியந்தத் திறஞ்சொல்வாரே.

திறஞ்சொல் சகலகலை சேதியெல்லாம்
தீர்க்கமுள்ள மவுனமதின் திறமுஞ் சொல்வார்
பறஞ்சொல்வார் பராபரத்தின் பதிவுஞ்சொல்வார்
பதிவாக மவுனமதின் திறமுஞ் சொல்வார்
நிறஞ்சொல்வார் நிஷ்டையுட நேர்மை சொல்வார்
நெஞ்சங்கள் தான்வலிக்க நிதியுஞ்சொல்வார்
கறஞ்சொல்வார் காயாதி கற்பஞ்சொல்வார்
கண்மணியே மனதுவரக் கருதிக்கேளே

கேழ்க்கையிலே நீசெய்த நன்மைப்பாகம்
கிருபையுடன் சொல்லிடுவா ரப்போதானும்
வாழ்க்கையுள்ள தேகமடா வலுத்துப்போகும்
மகத்தான புத்தியுமே சொலிக்க லாச்சு
தாழ்க்காமல் பதவியிலே மேவலாச்சு
சதாகாலம் போதையுமோ தரிக்கலாச்சு
காக்கையிலே கால்வலுத்து நடக்கலாச்சு
கதிரான தீபவொளி காணலாச்சு

பல நூல்களைத் தேடிப் படித்து அறிந்து பக்குவமடைய நமது வாழ்நாள் போதாது அதனால் சிறுவயது என்றாலும் கூட மகத்தான் குருவை தேடியடைந்து, அவருக்கு அணுக்கமாய் இருந்த்  அவர் மனம் கோணாதபடி நடந்து கொண்டு அவரிடம் கற்கவேண்டும் என்கிறார்.  அப்படி இருந்தால் மட்டுமே குருவானவர் சிவ சக்தி தீட்சை தந்து, சிறப்பான ஆதி அந்த திறன் எல்லாம் உபதேசிப்பாராம். சகல கலை செய்திகள் முதல் மௌனத்தின் திறங்கள், நிஷ்டை முறைகள், காயகற்ப வகைகள் என அனைத்தும் உபதேசிப்பாராம். அத்துடன் செய்த நன்மைகள் அதனால் கிடைக்கும் பலன்கள் முதல் கர்ம வினைகள் நீக்குவதற்கான வகைகளை சொல்லி சமாதி நிலைக்கும் வழிகாட்டுவாராம் என்கிறார். 
இப்படி நேரடியாக குருவுடன் இருந்து கற்றால் குருவானவர் கருணையுடன் எல்லாம் சொல்லிதருவாராம். அதனால் காயசித்தியும், புத்திக்கூர்மையும், பேரானந்த நிலையும் கிடைப்துடன் புருவ மத்தியில் தீப ஒளியையும் காணலாமாம். என்கிறார். அந்த வகையில் இந்த பதிவினை எல்லாம் வல்ல குருவுக்கு சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.