வியாழன், 18 ஜூன், 2020

நான்யார்? . சுவாசம் என்றால் என்ன?.



சுவாசம் என்பது ஒரு தன்னிச்சை (Automatic)செயல். உடல், உயிர் இவை இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று பின்னி பினைந்திருக்க அவசியம் சுவாசம் தேவை. 

உடலுள் உயிர் இருக்கின்றதா? உயிருள் உடல் இருக்கின்றதா? என்பதை அவரவர் அனுபவத்தின்கண் கண்டறியலாம். மனிதன் ஒரு பொம்மைக்கு சாவி கொடுத்து இயங்க செய்கின்றான் என்று வைத்துக்கொள்வோம். அவன் கொடுத்த சாவியின் வேகம் குறைந்ததும் பொம்மையின் இயக்கம் தன்னாலே நின்றுவிடும். அதேபோன்று நம்மை படைத்த இறைவன் நமக்கும், நமது வினைகளுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட அளவு விசை கொடுத்து தாயின் கருவறையிலிருந்து,  பூமிப் பந்தில் இறக்கி வைத்து  இயங்க விடுகின்றான்.
அவன் கொடுத்த விசை ஒவ்வொருவருக்கும் வேறுவேறு விதமாக இருக்கும். ஒருவருக்கு ஒரு முடுக்கு விசை, மற்றொருவருக்கு இரு முடுக்கு விசை, பிறிதொருவருக்கு மூன்று முடுக்கு விசை, இதேபோன்று பலருக்கும் பல்வேறு வகையில் பலதரப்பட்ட முடுக்கு விசை கொடுத்து தன்னிச்சையாக இயங்க வைத்து வேடிக்கை பார்க்கின்றான். இதற்கு மற்றைய சுவாசித்தலைக் கொண்ட உயிரினங்களும் விதிவிலக்கல்ல. ஆனால், அவன் கொடுத்த விசையினால் தன்னிச்சையாக இயங்க வைத்ததோடுமின்றி இங்கே மனித இனங்களுக்கென்று தன்னிச்சையாக செயல்படும் புத்தியையும் கூடவே கொடுத்து இயங்க வைத்துள்ளான். அவன் கொடுத்த விசையின் (சுவாசத்தின்) காலம் முடிவதற்குள், தனக்கென்று கொடுத்துள்ள புத்தியைக் கொண்டு நாம் குட்டிக் கரணம் போடலாம், தோப்புக் கரணம் போடலாம், வீராவேசம் காட்டலாம், பிறரை அழிக்க நினைக்கலாம், அலைபேசி, கணிணி , நானோ மேட்டர், ரோபோ ,   இன்னும் என்னென்னவோ செய்யலாம். அல்லது ஏன் என்னை இப்படி விசை கொடுத்து இயங்க வைத்தாய் என்று இறைவனிடமே அழுது புலம்பி சண்டைக்கும் போகலாம். எல்லாம் செய்யலாம். கூடவே சுவாச பயிற்சியும்  செய்யலாம். 

இறைவன் கொடுத்த விசையின் காலம் முடிவதற்குள் நான் யார் என்பதை அறிந்து பரம்பொருளிடம் சரணாகதி அடைவது தான் ஒரு வழி. சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் இதைத்தான் சொல்கின்றனர். அப்படி இறைவனிடம் சரண் அடையும் வழிகளில் (மார்க்கங்களில்) இந்த சிவயோகசாரம் தொடரில்  கூறப்படும் வழியும் ஒன்று. இறைவன் கொடுத்த சாவியின் விசைக்காலம் முடிவதற்குள்,  இறைவனிடம் முழுசரணாகதி அடையாவிட்டால், விசைக்காலம் முடிந்தவுடன் மீண்டும் நம்மை கையிலெடுத்து மீண்டும் விசை கொடுத்து விளையாட விட்டு வேடிக்கை பார்ப்பான் இறைவன். நிற்க, மனிதன் சராசரி ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியில் விடுகிறான் எனவும், இந்த கணக்கில் ஒரு நாளில் 21,600 முறை சுவாசிக்கிறான் எனவும் நம் முன்னோர்கள் அறிந்து கூறியுள்ளனர். எத்தனை நாள் நாம் சுவாசிப்போம் என்று யாராலும் கூறமுடியாது.(விதிவிலக்கு: சித்தர்கள்) சுவாசம் என்பது அவசியமான ஒன்று. நான் சுவாசிக்க மாட்டேன் என்று யாராலும் அடம் பிடித்து கூறமுடியாது. ஆனால் அந்த சுவாசத்தை (விசையை) முறைப்படுத்தி இறைவன் கொடுத்த விசையின் வேகம் குறைவதற்குள்(ஆயுள் முடிவதற்குள்), நான் யார் ? என்ற கேள்வியை எனக்குள் நானே கேட்டு, அதன் விடையாக,  நான் பிரம்மத்தின் சொரூபம். ஆனால் நானே பிரம்மம் அல்ல.   எனது தாயும், தந்தையும், சுற்றத்தார் அனைவரும், உலக ஜீவராசிகள் அனைத்தும் அந்த பிரம்மத்தின் சொரூபம்தான் என்பதை அறிந்து, நான் எனும் எனது ஜீவஆத்மா பிரம்மத்தோடு ஐக்கியமாக முயற்சிசெய்வேன். 

ஒருக்கால் விசை முடிவதற்குள் என்னால் இறைவனோடு ஐக்கியமாக முடியாவிட்டால், ஒன்றும் கவலைப்படமாட்டேன். மறுபடியும் இறைவனிடம் வாய்ப்பு கேட்டு, விசை கொடுக்கச் சொல்லி மன்றாடி கேட்டுப் பெற்று (நீ விளையாடற ஆட்டம் எனக்கு தெரியும். இந்த தடவையாவது நான் ஜெயிக்கிறேன்னு சொல்லி) மீண்டும் இந்த பூமியில் விளையாட வருவேன். 
உண்மையை சொல்லப்போனால்  84 இலட்ச்சம் உயிரினங்கள், உப பிரிவுகள், மரமாக பிறந்தால், ஆயிரக் கணக்கான வருடங்கள்,  மலைப்பிரதேசத்தில் பிறந்தாலும்  நூற்றுக்கணக்கான வருடங்கள், 
இப்படியாக,  மனிதப் பிறப்பை திரும்ப எப்போ கிடைக்கப் பெறுவோம் என்பதே தெரியாத தருணத்தில், இந்த கிடைத்தற்கரிய மனிதப் பிறப்பை, நம் பிறப்பு அறுப்பதற்கு   ,சரியான குருவைத் தேர்ந்தெடுத்து பிறப்பை அறுப்பதே உங்கள் பிறப்பின் நோக்கமாக கொள்க. 


மீண்டும் தொடர்கிறேன்.....