சனி, 21 பிப்ரவரி, 2015

அருட்தொண்டால் பயன்காண்போர்கள் நாதழுக்கப் பெருமையோடு போற்றுவார்கள்..

Thoughts on Ego & Silence
வாழ்க வளமுடன்.

குருவினால் உண்டான பயனை விளக்குவது கூட குருவின் பெருமையை பரப்புவது தான்.
உன் முனைப்பு நிலவு ஒளி ரவியால் போல
உயர் குருவின் ஒளி என்றே உணர்ந்தடங்கு.
குருவினால் தான் இந்தப்பேச்சே உண்டாகிறது என்று இருக்கும் போது தன்முனைப்பு தனை அங்கே எங்கும் கண்டுபிடிக்க முடியாது போகிறது.
வாதிட ஒன்றும் இல்லை. அவரவருக்கு குருவினால் உண்டான அனுபவத்தை அவரவர் முன்படர்ந்து சொல்வது குருவிற்கு நாம் செய்யும் சிறு காணிக்கையே.
மொழிப்புலமை உள்ள இருவர் தங்கள் கருத்தை சொன்னால் அது முனைப்பை எளிதாக வெளிக்காட்டும். அகங்காரமாக இருக்கும் ஒவ்வொருவரின் பேச்சும் அதன் தொனியும்.
குருவினால் அகத்தவத்திலே உயர்கிற எந்த இருவரும், ஒருவரின் கருத்து மற்றவருக்கு ஒத்துப்போய்விடும். ஏனெனில், அனுபவம் உள்ளே ஒன்று தான். ஒருவரின் பயணம் ரயிலில் என்றால் மற்றவரின் பயணம் விமானத்தில் என்று இருக்கும். அவ்வளவே. ஆனால் இருவரின் பயணமும் குருவை நோக்கியே என்ற விதத்திலே ஒத்துப்போய்விடுவார்கள்.
ராமகிருஷ்ணர் முன் யார் எந்த கடவுளின் மீது பாடல் பாடினாலும் கூட அதோடு ஒன்றிப்போய் அழுதுவிடுவாராம்.
குருவிடம் சரணடைந்த பல சீடர்கள் ஒன்று சேர்ந்தால்... அங்கே மௌனமன்றோ இருக்கும்?!
நான் ஆகாயம் இல்லை, நிலம் இல்லை, நீர் இல்லை, காற்று இல்லை, பஞ்ச பூதங்கள் ஒன்றும் இல்லை. இந்திரியங்களும் இல்லை. அண்டமும் இல்லை. அணுவும் இல்லை. விளக்கமற்றதும்,முடிவற்றதும், பிரம்மமாகவும் இருக்கிற சிவன் மாத்திரமே " நான்" என்று அத்வைதத்தை சொன்ன பாலகன் ஆதிசங்கரனைப்போல, இதெல்லாம் நானா என்று என்று தவத்திலே உணர்ந்து, குருவிடம் ஒன்றாக இருக்கிற குருவின் சீடர் இருவருக்கு பேச்சு எப்படி இருக்க முடியும்?
கரூரில் ஜீவ சமாதி ஆகியிருக்கும் பிரம்மேந்திரர், தவ சீலர். இளமையிலே வாதத்திலே அனைவரையும் அடக்கினாராம்... ஊரே பாராட்டியதாம். அதை கேள்விப்பட்ட அவரது குரு, ஊர் வாயை எல்லாம் அடக்கக் கற்றுக்கொண்ட நீ உனது வாயை அடக்க இன்னமும் கற்றுக்கொள்ளவில்லையே என்றாராம்..
அத்தோடு அவர் தனது வித்வான் பதவியை உதறி விட்டு மௌனத்திலே ஆழ்ந்தாராம்.
கடுந்தவம் செய்தாராம். அவரின் வாழ்விலே பல சாதனைகள் செய்தாராம். ஆனால் மௌனத்திலே வாழ்ந்து, கரூரிலே ஜீவ சமாதியில் ஆழ்ந்தாராம்.
யார் வாயை அடைத்தாலும் கூட, குருவின் கட்டளை வரும் போது எந்த சீடனும் மௌனத்தை விட்டு விலகி வரப்போவதில்லை. அதுவரை பேச்சு, எழுத்து என்று அங்கும் இங்கும் இருக்கவேண்டியது தான்.
குரு போதும் என்றால், அனைத்தும் நின்று விடும். எனது இருப்பும் கரைந்து விடும். எதற்க்கு விட்டு வைத்திருக்கிறாரோ என் அப்பன்?!