வெள்ளி, 20 நவம்பர், 2015

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம்! திருவருணை,

கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தங்க மலையாகவும், கலியுகத்தில் ஞானிகளின் பார்வையில் மரகத மலையாகவும், நம் போன்ற சாமானியர்களுக்குக் கல்மலையாகவும் காட்சி கொடுக்கும் மலை திரு அண்ணாமலை. அண்ணுதல் என்பதன் எதிர்ப்பதம் அண்ணா என்பது அல்லவா? நெருங்க முடியாத மலை திரு அண்ணா மலை. ஈசன் ஒளிப் பிழம்பாய்ச் சுடர் விட்டுப் பிரகாசிக்க பிரம்மாவாலும், திருமாலாலும் அவனை நெருங்கவே முடியவில்லை அன்றோ? இதைத் தவிர இந்தத் தலத்திற்கு அருணாசலம் என்ற பெயரும் உண்டு. அருணன் என்பது சூர்யோதயத்துக்கு முன்னர் கீழ்வானம் காட்டும் செக்கச் சிவந்த நிறத்தைக் குறிக்கும். அப்படி சிவந்த நிறத்தாலான நெருப்பைக் குறிக்கும் அசலம் அருணாசலம். அருணாசலம் தவிர இந்தத் தலம் முக்திபுரி, அருணகிரி, திருவருணை, அருணை, சுத்த நகரம், சோணாசலம், அனல்கிரி, தென் கைலை, ஞா நகரம், அண்ணாநாடு, சிவலோகம், அண்ணாத்தூர், கெளரி நகரம், தேக நகரம், முக்தி நகரம், ஞான நகரம், சோணாத்ரி, அருணாத்ரி, தலேச்சுரம், சோணகிரி ஆகிய பெயர்களாலும் அழைக்கப் படுகின்றது. இந்த மலையானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,700 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது. 
அருணாசல புராணம், உரோமசர், குத்சர், குமுதர், சகடாயர், அகத்தியர், குமுதாட்சர், வத்சர், வைசம்பாயனர், கணாசி, வியாக்ரபாதர், வாமதேவர், சனகர், சனத்குமாரர், வியாசர், மதங்கர், பதஞ்சலி ஆகியோருக்கு நந்தி தேவராலும், மார்க்கண்டேய ரிஷியாலும் கூறப்பட்டது எனத் தெரிந்து கொள்கிறோம். இந்த மலை உருவான கதை அனைவரும் அறிந்ததே என்றாலும் சுருக்கமாய்க் கீழே தருகிறேன்.
பிரம்மாவும் விஷ்ணுவும் ஒரு முறை தங்களில் பெரியவர் யார் என்பது குறித்துச் சண்டை போட்டுக் கொண்டனர். தங்களுக்குள் எவர் பெரியவர் என்பதைச் சொல்லச் சரியான நபர் ஈசனே என்பதை அறிந்து கொண்டு அவரிடம் சென்று தங்களில் யார் பெரியவர் எனக் கேட்க, ஈசனும் தன்னை அடிமுதல் முடிவரை எவர் கண்டறிந்து வந்து சொல்கின்றனரோ அவரே பெரியவர் எனச் சொல்லிவிட்டுத் தான் ஜோதி ஸ்வரூபமாய் நின்றார். வராஹ உருவில் பூமியைக் குடைந்து கொண்டு விஷ்ணு அடியைக் காணச் செல்ல, அன்னமாக மாறி பிரம்மா முடியைக் காணப் பறந்தார். வராஹ மூர்த்தியால் அடியைக் காண இயலவில்லை. மேலே மேலே பறந்து சென்று கொண்டிருந்த அன்னப் பறவையான பிரம்மாவுக்கு ஈசன் தலையில் சூடிய தாழம்பூ ஒன்று கீழே இறங்குவது கண்களில் பட, அந்தத் தாழம்பூவைச் சாட்சியாக வைத்துக் கொண்டு ஈசனிடம் தான் முடியைக் கண்டதாய்க் கூறுகிறார். வராஹ மூர்த்தியோ தன்னால் அடியைக் காண இயலவில்லை என்னும் உண்மையை ஒப்புக் கொள்கிறார். தாழம்பூவும் பிரம்மா முடியைக் கண்டதாய்ப் பொய்ச் சாட்சி சொல்ல கோபம் கொண்ட ஈசன், பிரம்மாவின் வழிபாடுகள் இனி பூவுலகில் நடக்காது என்றும், ஈசனின் வழிபாட்டில் இனித் தாழம்பூவைச் சேர்த்தல் கூடாது என்றும் கூற பிரம்மா தவறுக்கு மனம் வருந்தினார். அன்று முதல் ஈசனின் வழிபாட்டில் தாழம்பூவுக்கு இடம் இல்லை. 
தேவாதிதேவர்கள் வந்து ஈசனை வணங்கி அவர் அந்தத் திருக்கோலத்திலேயே பூவுல மக்களுக்கும் காட்சி கொடுக்கவேண்டும் எனக் கேட்க ஈசனும் அவ்வாறே ஆகட்டும் என்று கூற ஈசனின் வெப்பம் தாங்காமல் அனைத்து மக்களும், தேவர்களும் தவிக்க, ஈசனும் தன் பெருங்கருணையால் அக்னி மலையாக மாறி நின்றான் என்பது தல புராணம். திருஞான சம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பதிகங்கள் பாடப்பட்டது. பழைய லெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதி எனச் சரித்திர ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது. இதை பகவான் ஸ்ரீரமணரின் முக்கிய சீடர் ஆன பால் பிரண்டன் என்பவர் ஆதாரங்களோடு, தனது Message from Arunachala என்ற புத்தகத்தில் எழுதி இருப்பதாய்த் தெரியவருகிறது. மேலும் இந்த மலையானது இறுகிய எரிமலைக் குழம்பே என்பது விஞ்ஞான ஆய்வாளர்களால் நிரூபிக்கப் பட்டு இமயத்தை விடவும் பழமையானது என்பது கூறப்பட்டுள்ளது. அருணாசலத்தைப் பற்றிய நூல்கள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவை இருப்பதாயும் தெரிய வருகிறது. சாசனங்கள் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் காணப்படுகின்றன. பல்லவர் காலங்களிலேயே இந்தக் கோயில் கருவறை எழுப்பப் பட்டிருக்கவேண்டும். மதில் சுவர்கள் பிற்காலச் சோழர்காலங்களில் கட்டப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதைத் தவிர, நாட்டுக்கோட்டை நகரத்தார் 1903-ம் வருஷம் திருப்பணிகள் செய்து திருக்குடமுழுக்கும் செய்வித்திருக்கின்றனர். 
கார்த்திகை தீபம் நெருங்கி விட்டதால் திருவண்ணாமலை தொடரை முதலில் போட்டு விட்டுப் பின்னர் சிவ வடிவங்களில் மற்றவர்கள் தொடருவார்கள். பொறுத்துக் கொள்ளவும். நன்றி.