சனி, 29 ஜூன், 2013

குருவின் தத்துவம்!

குருவின் தத்துவம் அத்வைதம்... அத்வைதத்திலே கூட்டம் நிலையாக இருக்குமா?
எந்த ஒரு எழுத்துக்களிலும் சிலவரிகள் புரியவில்லை அல்லது தெளிவாக தெரிவிக்கப்பட வில்லை என்ற ஒரு தோற்றம் இருக்கும். ஆனால் தெரிவிக்கப்பட்ட வரிகள் பயன்படுத்தப்பட்டதன் அவசியத்தையும், இந்த வரிகளானது இந்த இடத்திலே நமக்கு என்ன சொல்ல வருகிறது என்று நோக்கினால் அதன் தன்மை புரிந்து விடும். ஆனால் அதற்கு நிலையான ஒன்றின் மேல் நாம் கொண்டிருக்கும் பற்றின் அளவினைப் பொறுத்தே தான் வெற்றி கிட்டும்.

புலன்களைக்கடந்த இறையோடு ஒன்றி இருக்கிற தன்மையின் அளவு உயர உயர நுண்மையான விசயங்கள் எல்லாம் தெளிவாக கிடைக்க ஆரம்பிக்கும்.


குருவை நோக்கி நாம் நகரும் போது, குருவின் பிரதிபலிப்பு என்பது மனதைக் கடந்து தியானிப்பவர்களுக்கு தியானத்திலே உதவியாகவும், மன அலையால் நோக்குபவர்களுக்கு அவரவர் தன்மைக்கு ஏற்ப குருவின் கட்டுரையாக, புத்தகமாக, கவிகளாக, வேண்டுபவரின் தன்மைக்கு ஏற்ப வந்து சேரும்.

சீடனின் நோக்கத்திற்கேற்றார் போல குருவின் பதில்கள் செயல்விளைவாக, இயல்பூக்க நியதியாக வந்து சேர்ந்து கொண்டே தான் இருக்கும். எமது கருத்துக்கள் என்பது எவ்விதத்திலும் முனைப்போடு எழுதப்பட்டிருக்குமேயானால், அந்த முனைப்பு உண்டானது குருவிடம் இருந்து பிரிந்ததால் ஏற்பட்டிருக்கும்.

நாம் தவமியற்றுகிறோம்... தவத்திலே சொல்லித்தந்தபடி உடலில் இருந்து உயிர் எழுந்து சகஸ்ராரம் வழியாக, சந்திரன் சூரிய மண்டலங்கள் மற்றும் பேரியக்க மண்டலங்கள் என்று எல்லா நிலைகளையும் யூகித்து பிறகு சிவகளத்தினை நோக்கும் போது நாம் சுத்தவெளி என்ற நோக்கில் தவமியற்றுகிறோம். சுத்தவெளி என்றால் என்ன செய்யவேண்டும்? ஒன்றுமே இல்லாத இடம் என்று கொண்டால், அது தவறாகும். ஏனெனில், ஒன்றுமே இல்லாத ஒன்று எப்படி அனைத்தையும் காக்கும்? என்ற கேள்வி எழும்.

இந்த சிவகளத்திலே யூகித்துக்கொண்டிருந்தால் எப்போது தான் அங்கே லயிப்பது? அதற்க்கு என்ன செய்வது? என்று குருவை முன் நிறுத்தினால்,

தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மை
தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும் என்ற வரிகளுக்கு ஏற்ப,

எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
அறிவினிலும் உடலினிலும் மாற்றங்காணும்
இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்

என்ற வரிகளுக்கும் ஏற்ப இயல்பூக்க நியதியின் படி, அங்கே சிவகளத்திலே சீடன் குருவை அணுக அறிவினிலும் உடலினும் மாற்றங்காணுவார்.

சரி, நம்மால் குருவை தவத்திலே கொண்டுவரமுடியவில்லை. கொண்டு வந்தால் கூட தவத்திலே நிலைக்கமுடியவில்லை என்றால் குருவின் பதில்....

எப்பொருளை எச்செயலை எக்குணத்தை எவ்வுயிரை
ஒருவர் அடிக்கடி நினைந்தால்...

என்று சொல்கிறார்.

குருவை அடிக்கடி நினைந்தால் தான் தவத்தின் போது கூட குருவின் நினைவு தானாக இயல்பாகவே தோன்றி குருவைப்போலவே சிவகளத்திலே ஒன்றிப்போகமுடியும். அதுவரை கற்பனை தவம் தான் நிகழும்.

இப்போது சிவகளத்திலே எப்படி இருக்கவேண்டும் என்றால் குரு சொல்வார்...

இருளாக மௌனமாக இச்சையின்றி தேவையின்றி
இயக்கமின்றி இருப்பதுவே ஈசன் நிலை.

அனைத்துத் தன்மையாக இருக்கும் வல்லமை ஏற்பட்டால் தான் ஈசன் நிலையோடு ஒன்றாக முடியும்.

இருளாக, மௌனமாக, எந்த இச்சையின்றி, எந்த தேவையும் இன்றி, எந்த இயக்கமும் இன்றி மாறுகிற தன்மை வந்தால் குருவோடு ஒன்றாகி விடலாம்.

இந்த ஈசன் நிலையிலே, அங்கே இருப்பாகிய ஈசனாகிய இறையைத்தவிர ஒன்றும் இல்லை.. என்று அதனோடு கரைந்து முனைப்பை அறுத்து விட்டோம். இப்போது இருப்பது = இருப்பு + அது என்று சீடன் ஆகிவிட்டான்... அதுவே துரியாதீத தவத்திலே முழுமையான நிலை. அந்த நிலையிலே இருந்து சீடன் கேட்கிறான்... " துரியாதீதத்திலே எது நிலைத்தது? நாம் புறவாழ்விலே கூட்டத்தை நோக்கிப்போகிறோமே அது நிலைக்குமா? நீடித்து நிற்குமா?"