வியாழன், 16 ஏப்ரல், 2015

திருமந்திரம்

பரம்பொருளான இறையுடன் ஒன்றிணை யும் நிலையே முக்தி நிலை. இவ்வாறு ஜீவாத்மாபரமாத்மாவுடன் இணையும்போதுதான் எல்லையற்ற ஆனந்த நிலை உருவாகும். இதையேபரமானந்த நிலை என்கிறோம். இதுவே இறையனுபவம். இந்த இறையனுபவம் குறித்துதிருமூலர் பாடியுள்ள சில திருமந்திரப் பாடல்களைக் காணலாம்.

"உரை அற்று உணர்வு அற்று, உயிர்பரம் அற்று

திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்

கரையற்ற சத்தாதி நான்கும் கடந்த

சொரூபத்து இருத்தினான் சொல்இறந் தோமே."
பரமனோடு இணையும் இறையனுபவம் கிடைக்கும்போது முதலில் பேச்சு நின்றுபோகும். இதையே முதல் வரியில் "உரை அற்று' என்கிறார் திருமூலர். மனிதனின்பிரச்சினைகள் அனைத் திற்கும் மூல காரண மாக அமைவது அவனது நாக்கும்அதிலிருந்து உருவாகும் பேச்சுமே ஆகும்.

ஓயாத வீண் பேச்சே மனிதனின் முதல் எதிரி. மௌனம் ஞானப்பாதையின் முதல் படி.இறையனு பவத்தின் முதல் அனுபவம் அல்லது விளைவு என இந்த "உரை அற்ற'நிலையைக் குறிப்பிடுகிறார் திருமூலர்.

அடுத்த அனுபவம் உணர்வு அறுந்த நிலை (உணர்வு அற்று). சிலர் வாரம் ஒரு நாள்அல்லது மாதம் ஒரு நாள் மௌன விரதம் இருப்பார்கள். வாய் மட்டும்தான்மூடியிருக்கும். மனதிற்குள் ஆயிரம் சிந்தனைகள் புயலடித்துக்கொண்டிருக்கும். இத்தகைய மௌன விரதத்தால் எந்தப் பலனும் கிட்டுவதில்லை.
பேச்சுக்கு மூலமாக அமைவது உணர்வுகளும் சிந்தனைகளுமே. நாக்கும் உதடுகளும்ஒலியை உண்டு பண்ணும் கருவிகள் மட்டுமே. உரை (பேச்சு) உருவாவதுசிந்தனையில்தான். நமது உணர்வு நிலையின் அடிப்படையிலேயே சிந்தனைகள்எழுகின்றன. ஆக, உரைக்கு ஆதிமூலம் உணர்வுகளே. இறையனுபவம் கிடைக்கும்போதுஇந்த உணர்வுகளும் அற்றுப் போகும்.

அடுத்த வார்த்தையைக் கவனியுங்கள்- "உயிர்பரம்' (அற்று). உயிர்பரம் என்பதைஉயிர் அற்று, பரம் அற்று என்று இரண்டாகப் பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும்.
உயிர் என்பது ஜீவாத்மாவையும், பரம் என்பது பரமாத்மாவையும் குறிக்கும் சொற்களாகும். உயிர் என்பது ஜீவாத்மாவின் உள்ளி ருக்கும் "தான்' எனும்அகந்தையை- ஆணவத் தைக் (ஆணவ மலம்) குறிக்கிறது. இறையனு பவம் கிடைக்கும்போதுஜீவாத்மாவின் இந்த அகந்தை அழிந்து போகும். (உயிர் அற்று). பரம் அற்று என்றசொல்லில் ஒரு சூட்சுமம் உள்ளது. சில உரையாசிரியர்கள் உயிர் பரம் அற்றுஎன்ற சொற்களுக்கு, "பரமனை அடையத் தடையாக இருக்கும் தான் எனும் அகங்காரம்அற்றுப் போய்' என்று பொருள் எழுதியுள்ளனர். இது மிகவும் ஏற்புடையதே.

ஆனால் இதை சற்றே ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது, இதைவிட மேலான ஒருசூட்சுமம் உள்ளே பொதிந்து கிடப்பது தெரியும். உயிர் அற்று- தான் எனும்அகந்தை அழிந்து என்றே கொள்ளலாம்.

அது என்ன பரம் அற்று? ஜீவாத்மா முக்தி நிலையடைய சதா பரமனின் நினைவாகவேஇருந்து, அவனது தாள்களைப் பற்றிக் கொண்டு, முக்தி நிலை அடைவதற்கானமுயற்சிகளில் ஈடுபட வேண்டும். ஆக, முக்தி நிலையை அடையும் வரையில் பரமனின்திருவடிகளே ஜீவாத்மாவின் சிந்தனை முழுவதும் நிறைந்திருக்க வேண்டும்.

ஆனால் இறையனுபவம் எனும் முக்தி நிலையை அடையும்போது, அங்கே உயிர் என்றும்பரம் என்றும் பேதங்கள் இல்லை. இரண்டும் ஒன்றாக இணைந்த நிலையே அந்தபேரானந்த நிலை. அந்த நிலையில் உயிர் அற்றுப் போகும்; பரமும் அற்றுப்போகும். ஒரு பேரானந்த நிலை மட்டுமே எஞ்சி நிற்கும். எனவேதான் திருமூலர்இந்த இறையனுபவத்தை "உயிர்பரம் அற்ற நிலை' என்கிறார். இனி இரண்டாவதுவரியைக் காண்போம்.
"திரையற்ற நீர் போல் சிவமாதல் தீர்த்து'
"திரையற்ற நீர்' என்பதற்கு அலைகள் இல்லாத கடல் என்று பொருள். ஓயாமல்அலையடித்துக் கொண்டிருப்பதுதான் கடலின் இயல்பு. ஜீவாத்மாவின் மனமும்சிந்தனைகளும் எப்போதும் ஓய்வின்றி அலை பாய்ந்து கொண்டேயிருக்கும்.எனவேதான் ஜீவாத்மாவை கடலுக்கு ஒப்பிடுகிறார் திருமூலர்.
கடலின் கரைகளில்தான் அலைகள் அடித்துக் கொண்டேயிருக்கும். கடலின் உள்ளேசெல்லச் செல்ல ஆழம் அதிக மாகும்; அலைகள் இராது. மனிதர்களுக்கும் இதுபொருந்தும். புற வாழ்க்கை மட்டுமே வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருக்கும்மனிதர்கள் அலையடிக்கும் கடற்கரை போன்றவர்கள். உடலிலும் மனதிலும் அமைதிஇராது. இவர்களது வாழ்க்கை யிலும் ஆழமோ பொருளோ இராது. ஒரு அர்த்தமற்றவாழ்க்கை.
ஞானத் தேடலில் உள்நோக்கிச் செல்லச் செல்ல அலைகள் அடங்கும்; அமைதிபிறக்கும். உள்ளே இருக்கும் இறையெனும் ஜோதியைத் தரிசிக்க முடியும். இந்தஉள்நோக்கிய பயணத்திற்கான வழிமுறையாக திருமூலர் தந்திர யோகத்தைக் குறிப்பிடுகிறார்.

இந்தப் பயிற்சிகளின் மூலம் தங்களின் உள்ளே இருக்கும் பரமனோடு இணைந்தஅனுபவம் கிடைக்கும்போது, மனமும் உடலும் திரையற்ற நீர் போல் அமைதி யாகும்;மனம் சிவமயமாகும்.
"கரைஅற்ற சத்தாதி நான்கும் கடந்த'
இந்த மூன்றாவது வரியில் ஒரு நுட்ப மான தந்திர யோக சூட்சுமம் பொதிந்துகிடக்கிறது. சத்தாதி என்பது ஓசையைக் குறிக்கும் சொல்லாகும். "சத்தாதிநான்கும் கடந்த' என்றால், நான்கு வகையான ஓசை களையும் கடந்த நிலை என்றுபொருள். அது என்ன நான்கு வகையான ஓசைகள்?

தந்திர யோகத்தில் ஓசைகளை நான்கு வகையாகப் பிரிக்கிறோம்.

* செவி ஓசை

* மிடற்றோசை

* நினைவோசை

* நுண் ஓசை

"செவி ஓசை' நாம் அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு கணமும் பலவிதமான ஓசைகள் நம்சுற்றுப்புறத்திலிருந்து நம் காதுகளை வந்தடைகின்றன. இந்த ஓசைகள்செவிப்பறையைத் தாக்கும்போது உருவாகும் அதிர்வுகள் செவி நரம்புகளில்மின்காந்த அலைகளாக மாற்றப்பட்டு மூளையைச் சென்றடைகின்றன. நமது மூளையே அந்தஓசைகளின் அர்த்தங்களைப் பகுத்துணர்ந்து அறிகிறது. நமது செவிகளின் மூலமாகநாம் உணர்ந்து கொள்ளும் ஓசைகள் செவி ஓசை எனப்படும். இறையனுபவம் கிடைக்கும்போது இந்த செவி ஓசைகள் எதுவும் நம்மை வந்தடையாது. செவி எனும் புலன்அடங்கிப் போகும்.

அடுத்த ஓசை "மிடற்றோசை'. இது நம் உள்ளிருந்து உருவாவது. தொண்டைப்பகுதியில் உருவாகும் ஓசையை காது நரம்புகள் நேரடியாக உணர்ந்துகொள்வது.உதாரணமாக ஒரு பாடலை நாம் வாய் திறந்து பாடாமல், வாய்க்கு உள்ளேயேபாடும்போது நமது செவிகள் அதை உணர்ந்து கொள்கின்றன அல்லவா.

பக்கத்தில் இருப்பவர்களால் இந்த ஒலியை- ஓசையை உணர முடியாது. வாயிலிருந்துவெளியே வரும் ஓசைகளே காற்றில் ஒலி அலைகளாகப் பரவி செவிப்பறையை அதிர வைக்கமுடியும். மிடற்றோசை வெளியில் வராத ஓசை. தொண்டைப் பகுதியிலுள்ள குரல்நாண்களின் அதிர்வை செவி நரம்புகள் நேரடியாக உணர்ந்து கொள்ளுதல்.

மூன்றாவது ஓசை "நினைவோசை.' எந்தவிதமான ஒலி அலைகளையும் உருவாக்காமல், நமதுநினை வில் மட்டுமே ரீங்காரமிடும் ஓசை. உதாரணமாக உங்களுக்கு மிகவும்பிடித்த ஒரு பாடலை அல்லது இசையை நீங்கள் நினைத்துப் பார்க்கும்போது, அதுஉங்களது நினைவில் ரீங்காரமிடும்.

இந்த நினைவோசை நமது நினைவில் மட்டுமே உருவானது. ஒலி அலைகள், செவிப்பறைகள்,செவி நரம்புகள் என எதுவுமே இந்த ஓசைக்குத் தேவை யில்லை. முழுக்க முழுக்கநமது மூளையில் உருவாகி, மூளையால் உணர்ந்து கொள்ளப்படும் ஓசை இது.

ஒலி அலைகள் எதுவும் உள்ளே புகா வண்ணம் காதுகளை இறுக மூடிக் கொண்டால்செவியோசை கேட்காது. நமது குரல் நாண்களின் அசைவை நிறுத்திக் கொண்டால்மிடற்றோசையும் கேட்காது. ஆனால் தந்திர யோகப் பயிற்சிகள் மூலமாக மட்டுமேமூளையையும் மனதையும் அமைதிப்படுத்தி, நினைவோசையை நிறுத்த முடியும்.

இந்த நினைவோசையும் அடங்கிய நிலையில் மட்டுமே ஆழ்நிலை தியானங்கள் கைகூடும்.தியானத்தின் ஆழ்நிலைகளுக்குச் செல்லச் செல்லத்தான் உள்ளே இருக்கும் இறைவனைஉணர்ந்து கொள்ள முடியும். அவனோடு இணைய முடியும்.
நான்காவது ஓசை "நுண் ஓசை'. நமது உடலில் ஒவ்வொரு கணமும் பல்லாயிரக் கணக்கானநிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன. பல நிகழ்வுகள் பலவிதமானஓசைகளையும் உடலினுள்ளே உருவாக்குகின்றன. சாதாரண மனிதர்களால் இந்த ஓசைகளைஉணரவோ, கேட்கவோ முடியாது.
உதாரணமாக, நமது இதயம் துடிக்கும் "லப்-டப்' என்ற ஓசை, மூச்சுக்குழலினுள்ளே மூச்சு செல்லும் ஓசை, ரத்தக் குழாய்களினுள்ளே ரத்தம் பாயும்ஓசை, நாடிகளில் பிராண சக்தி பயணிக்கும் ஓசை என பல ஓசைகளை நம்மால் கேட்கவோஉணரவோ முடிவதில்லை. (சில விஞ்ஞானக் கருவிகள் மூலம் மட்டுமே இந்த ஓசைகளைக்கேட்க முடியும்.)
தந்திர யோகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து பிற மூன்று ஓசைகளும் அடங்கியநிலையில், உடலில் உருவாகும் இந்த நுண் ஓசைகளை நம்மால் உணர்ந்து கொள்ளமுடியும்.

தந்திர யோகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வரும்போது, இதன் அடுத்தநிலையில் இந்த நுண் ஓசைகளும் அடங்கிப் போகும். குண்டலினி சக்தி விசுக்தி,ஆக்ஞை ஆகிய சக்கரங்களை அடைந்து அந்த சக்கரங்கள் திறந்து கொள்ளும்போது வேறுபலவிதமான நுண் ஓசைகளை நம்மால் உணர முடியும்.

பிற லோகங்களில் இருப்பவர்களின் குரல்கள், அமானுஷ்ய சக்திகள் உருவாக்கும்ஓசைகள் ஆகிய நுண் ஓசைகளை இந்த நிலை யில் உணரலாம். ஒரு பூ விரியும்ஓசையைக்கூட உணரலாம். இந்த நிலை ஒரு வகை சித்தி நிலையாகும். பிறரது மனதில்ஓடும் நினைவோசைகளையும் (எண்ணங்களையும்) இந்த நிலையில் கேட்க முடியும்.

தொடர்ந்து பயிற்சிகளைச் செய்து வந்தால் இந்த நுண் ஓசையும் அடங்கிப் போக, நுண் ஓசையின் இறுதி நிலையை அடையலாம்.

இந்த நிலை ஆக்ஞை சக்கரம் திறந்து கொண்டபின் உருவாகும். பல தெய்வீக ஓசைகள்நாள் முழுவதும் உடலுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கும். வீணை ஒலி, புல்லாங்குழல் இசை, நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டு வது போன்ற ஓசை, மணி ஒலி எனஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு விதமான ஓசைகள் கேட்கும். இது அதிகபட்சமாக ஓரிருவாரங் களே நீடிக்கும். பின்னர் இந்த ஒலிகள் அனைத் தும் அடங்கி, "ஓம்' என்றபிரணவ மந்திரத்தின் ரீங்காரம் உடலில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

இதுவே நுண் ஓசைகளில் கடைசி ஓசை யாகும். இறையனுபவம் கிடைக்கும்போது இந்தஓசையும் அடங்கிப் போகும். ஆக ஜீவாத்மா, பரமாத்மாவோடு ஒன்றிய நிலையைஅடையும்போது, செவி ஓசை, மிடற்றோசை, நினைவோசை, நுண் ஓசை ஆகிய நான்கு விதமானஓசைகளும் அடங்கிப் போகும். இனி பாடலின் கடைசி வரியைக் காணலாம்.

"சத்தாதி நான்கும் கடந்த

சொரூபத்து இருத்தினான் சொல் இறந் தோமே.'

நான்கு வகையான ஓசைகளையும் கடந்த நிலையில் (சொரூபத்து) இறைவன் என்னைக்கொண்டு இருத்தினான். அந்த ஆனந்த நிலையில் எனது பேச்சும் நின்று போயிற்று(சொல் இறந்தோமே) என்பதே இந்த கடைசி அடியின் பொருள்.

"சொல் இறந்து போதல்' தந்திர யோகப் பயிற்சிகளில் முக்தி நிலைக்கு முற்பட்டநிலையாகும். தாமச நாடி தூண்டப்படும்போது இது நிகழும். இது குறித்துஏற்கெனவே விரிவாகக் கண்டோம். அதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

"சொரூபத்து இருத்தினான்' என்ற சொல்லாடலிலும் ஒரு சூட்சுமம் உள்ளது.முக்தியை நோக்கிய பயணத்தில் நாம் எத்தனை முயற்சிகள் செய்தாலும், தந்திரயோகப் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டாலும் அந்த முக்தி எனும் பரமானந்தநிலையில் நாம் போய் இருந்துவிட முடியாது.

பரமன் அருள் இருந்தால் மட்டுமே நாம் அந்த இறையனுபவ நிலையை அடைய முடியும்.அந்த சத்தாதி நான்கும் கடந்த சொரூபத்தில் இறைவன்தான் நம்மைக் கொண்டுஇருத்த முடியும்.