சனி, 28 நவம்பர், 2020

சீடனின் உரிமை... குருவே சரணம்

எல்லாம் வல்ல இறை ஒன்றே எப்போதும் நீடித்து  நிலைத்து இருக்கிறது. அந்த சுத்தவெளி என்ற நிலைக்கு அனுபவிக்கவென்று, அறிவதற்கு என்று எதுவும் இல்லாது, பூரணமாக நிறைவிலே எப்போதும் இருக்கிறது.
மனிதன் என்பவன் தான் இறை என்ற இயல்பிலே இருந்து நிறைவினை உணராத நிலை தனக்குத் தெரிவதாகக் கருதி, மீண்டும் இறையை நோக்கிச் செல்லும் போது, அந்த சுத்த வெளியில் மனதை விரித்தும், ஒடுங்கியும் நின்று பார்க்கும் போது, அங்கே அறிவது (அறிவு + அது) என்று த்வைத மனப் பான்மையிலே இறை உணர்வினை உணர்கிறான். அறிவு என்பது தனது என்று மூலம் என்றும், அது என்பதை இறை என்றும் நினைக்கிறான். அறிவது என்பதிலே அறியப்படுவது என்ற சாட்சி நிலையும் அடங்கியே இருக்கிறது. இந்த சாட்சி அறிவும் இறைனிலை தான் என்றாலும், இறையே தான் சாட்சியாக இருந்து அந்த அனுபவத்தை பதிவு செய்கிறது...
முடிவினில், அறிவது என்பதைத் தாண்டி ஒடுங்கும் போது, அறிவது என்று இரண்டு நிலைகள் ஒடுக்கப்படும் போது, அங்கே முனைப்பு ஒடுக்கப்படுவதைக் காணும் போது, சத்தியமான இறைதத்துவம் அவனுள் ஜொலிக்கிறது.

இறையை உடல் என்ற வடிவத்திலே கண்ட மகான்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிலே ராமலிங்க வள்ளலார், ராமகிருஷ்ணர் போன்ற மகான்கள் எல்லாம் மன ஓர்மையினால் இறையோடு பேசினர்..
இருப்பினும் இந்த அனுபவம் எல்லாம் மகான்கள் சாதனையாக சிலரால் போற்றப்பட்டாலும், அதே நிலையிலே இருந்து விடவில்லை. மேற்கொண்டு இறையோடு சுத்தவெளியாகக் கரைந்து நின்றனர். இம்மகான்களின் எழுத்துக்கள் சுத்தவெளியினையே தான் மூலக்கருத்தாக இருக்கிறது. விவேகானந்தர் முதன் முறையாக ராமகிருஷ்ணரைப் பார்த்த போது, என்ன இது இவர் மன நிலை சரியில்லாதவரா? என்று நினைத்தாராம்.

சீடனைப் பார்த்தவுடன், ராமகிருஷ்ணர் அப்படியே அவரை அணைத்து, உனக்காக எவ்வளவு நாளாய் காத்துக் கொண்டிருந்தேன் தெரியுமா? எதற்கு இவ்வளவு தாமதமாக வந்திருக்கிறாய்? என்றெல்லாம் கண்களிலே ஆனந்தக் கண்ணீருடனும், சந்தோசத்திலே துடித்தாராம் குரு. அதெல்லாம், உடல் என்ற எல்லைக்குள் இருந்த சீடனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஒரு முறை சித்திகள் பெறுவது பற்றி குரு கேட்ட போது, விவேகானந்தர் குருவிடம் கேட்டாராம்... இந்த சித்திகளால், எனக்கு முக்தி பெறுவதற்கு உதவுமா? என்று கேட்டபோது, ராமகிருஷ்ணர் முக்திக்கு இந்த சித்திகள் உதவாது என்றவுடன்... அப்படி என்றால் எனக்கு அந்த சித்திகள் வேண்டாம் என்றாராம் விவேகானந்தர்... குருவின் கண்களிலே ஆனந்தக்கண்ணீருடன் பெருமையாகச்சொன்னாராம்... பாருங்கள்.. எனது நரேந்திரனை என்று ...
நாம் நமது குருவிற்கு அப்பேர்ப்பட்ட சீடனாக இருப்பது தான் குருவிற்கு உயர் புகழினைத் தர முடியும்.. குருவிற்கு உயர் புகழ் தருவது சீடனின் உரிமை. கடமை. நன்றிக் கடன். அதுவே குரு காணிக்கை.